திமுகவின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி தில்லைநகர் ஆறாவது கிராஸில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று(07-04-2025) நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல தில்லைநகரில் உள்ள கே.என்.நேருவின் ஆறாவது கிராஸில் உள்ள வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறையினர் தற்பொழுது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல பத்தாவது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மற்றொரு இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் முக்கிய நிர்வாகியாகவும் மூத்த அமைச்சராகவும் இருக்கக்கூடியவர் கே.என்.நேரு. அவரது வீடு மற்றும் சகோதரர் நிறுவனத்தில் நடைபெறும் சோதனைக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அவருடைய சகோதரர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இந்த சோதனை நடைபெறுவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. அமைச்சர் நேரு இல்லங்களில் நடைபெறும் சோதனை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.