Rock Fort Times
Online News

ஆய்வுக் கூட்டத்தில் தரக்குறைவாக பேசும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளோம்- திருச்சியில் மகப்பேறு மருத்துவர்கள் பேட்டி…!

மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள இந்திய மருத்துவர் சங்க கட்டிடத்தில் அதன் தலைவர் டாக்டர் ரமணிதேவி தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மகப்பேறு மருத்துவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.  தாய் -சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பில் மகப்பேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மகப்பேறு கால இறப்பைக் குறைப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அரசு, தனியார் இரண்டு துறைகளின் மகப்பேறு மருத்துவர்கள், துறை செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரின் உழைப்பால் இது நடந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அவர்களின் மேல் அழுத்தம் அதிகமாக உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர்களின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. கூட்டம்  இரவு 11 மணி வரை நீளும் நிலை உள்ளது. ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களின் பட்டத்தைக் கேலி செய்வது, மருத்துவர்களை கொலையாளியைப் போல் பேசுவது, நோயாளியின் கேஸ் ஷீட் ஐ கோபத்தில் கிழித்து எறிவது என்ற போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்து தந்த அறிக்கையின் படிதான் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் அரசு, தனியார் இரண்டிலும் உள்ள மூத்த மருத்துவர்கள் இடம் பெற வேண்டும். நாங்கள் உழைக்கிறோம், தாய்சேய் நலன் பேணுகிறோம், இறப்பு விகிதம் குறைக்க பாடு படுகிறோம். ஆனால் எங்களுக்கு மரியாதை இல்லை. மரியாதையை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  மருத்துவரைத் தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும். மருத்துவமனைகள் தரம் பிரித்தல் என்பது (level 1,2 & 3 ) நடைமுறையில் சாத்தியமில்லை. வீட்டில் பிரசவம் பார்ப்பது, அதற்கு ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் விழா நடத்தி பரிசு வழங்குவது ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கிறோம். எந்த மருத்துவரும் நோயாளி நலம் பெறவே பாடு படுவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர்கள் சர்மிளா, தமிழ்ச்செல்வி, ரமணிதேவி ஆகியோர்  செய்தியாளர்களிடம்  கூறுகையில், மருத்துவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் 30 வருடம் அனுபவமுள்ள எங்களை மாவட்ட ஆட்சியர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் சரியான நேரத்திற்கு ஆய்வுக் கூட்டத்திற்கு வராமல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்து இரவு வந்து கடுமையான சொற்களால் மரியாதை குறைவாக பேசுகிறார்கள். மேலும் ஆவணங்களை முகத்தில் தூக்கி எறியும் சம்பவம் நடைபெறுகிறது. இதனால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இது சம்பந்தமாக மருத்துவ துறை அமைச்சரையும், மருத்துவ துறை செயலாளரையும் சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளோம். ஆய்வுக்கூட்டம் நடத்தும் போது அனுபவமுள்ள நிபுணர்களை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தினால் தான் உண்மை தன்மை தெரிய வரும் என தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்