திருச்சியில் சரக்கு ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது…!
திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். சம்பவத்தன்று சவாரிக்கு சென்றவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சீராத்தோப்பு அருகே சுதாகர் என்பவரது வீட்டின் முன்பு சரக்கு ஆட்டோவுக்குள் மனோகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாஃபர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரின் பள்ளி தோழியான சுதாவுக்கு(35) மனோகர் பண உதவி செய்து வந்துள்ளார். இதனால், இரு வீட்டாரும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனோகரனின் மனைவி விபத்தில் இறந்த நிலையில் சுதாவுடனான நட்பு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்தநிலையில் வீட்டில் சவாரி செல்வதாக கூறிவிட்டு சுதா வீட்டிற்கு சென்ற மனோகர், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதா பணம் எல்லாம் திருப்பி தர முடியாது என்று திட்டியதுடன் மனோகரை எங்கேயாவது சென்று செத்துப் போ…என்று கூறியுள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த மனோகர் கள்ளக்காதலி சுதாவின் சேலையால் அவரது வீட்டின் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தனது வீட்டின்முன்பு கள்ளக்காதலன் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா, கணவர் சுதாகர் மற்றும் மாமனார் சுப்பிரமணி உதவியுடன் மனோகர் உடலை கீழே இறக்கி சரக்கு ஆட்டோவுக்குள் வைத்துவிட்டு ஏதும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று விட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் சுதா மற்றும் அவரது கணவர் சுதாகர், மாமனார் சுப்பிரமணி ஆகிய 3 பேர் மீதும் மனோகரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.