Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தரை அடிக்க பாய்ந்த செக்யூரிட்டி…!(வீடியோ இணைப்பு)

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானது  மான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.  கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்த பின் தெற்கு வாசல் வழியாக வெளியே  செல்கின்றனர்.  இந்தநிலையில் பக்தர்கள் வெளியே செல்லும் தெற்கு வாசல் பகுதியில் பக்தர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றபோது அங்கு காவல் பணியில் இருந்த செக்யூரிட்டி  அந்த பக்தரை தடுத்து நிறுத்தி இந்த வழியாக போகக்கூடாது என கூறியுள்ளார். அதற்கு அந்த பக்தர், இதற்கு முன்னால் சிலரை உள்ளே அனுமதித்தீர்கள், என்னையும் அனுமதியுங்கள் என கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே செக்யூரிட்டி அந்த பக்தரை கோவில் என்றும் பாராமல் தகாத வார்த்தையில் திட்டி மரக்கட்டையை எடுத்து அடிக்க பாய்ந்தார். உடனே அருகில் இருந்தவர் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். பக்தரை, செக்யூரிட்டி அடிக்க பாய்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமாக பக்தர்கள் வெளியே செல்லும் தெற்கு வாசல் வழியாக உள்ளே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சில செக்யூரிட்டிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்த வழியாக செல்ல அனுமதிக்கின்றனர். இதுதான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் வெளியே செல்லும் வழியில் உள்ளே சாமி தரிசனம் செய்ய “கிராக்கி” என்ற பெயரில் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதித்தார்கள். இதுகுறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், பக்தர்கள் வெளியேறும் வழியாக யாரையும் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது என்று கோவில் இணை ஆணையர் பிரகாஷ் கட்டுப்பாடு விதித்திருந்தார். தற்போது அந்த வழியாக செக்யூரிட்டிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பக்தர்களை அனுமதிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்