Rock Fort Times
Online News

டூ வீலரை திருடிவிட்டு “சாரி பிரதர் அண்ட் சிஸ்டர் மன்னித்து விடுங்கள்” என்று சுவற்றில் எழுதி விட்டு சென்ற திருடர்கள்…!

திருச்சி மாவட்டம், துறையூர்- பெரம்பலூர் புறவழிச் சாலை அருகே உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் துறையூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். செல்வம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இளங்கோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர், வீட்டின் முன்புறக்கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டு உள்புறக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டினுள் உள்ள மர பீரோவை உடைத்து திருட முயற்சித்து ஏதும் கிடைக்காததால் வீட்டின் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்களுக்கு நகை, பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் உள்புற அறையின் சுவற்றில் , ” சாரி பிரதர் அண்ட் சிஸ்டர், மன்னித்து விடுங்கள்” என கிரேயான் பென்சிலைக் கொண்டு எழுதிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் இளங்கோ துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துறையூர் -பெரம்பலூர் புறவழிச்சாலை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வருவதில்லை. குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள காலி மனைகளில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தும் நிகழ்வு தினந்தோறும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, இரவு ரோந்து பணியை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் முன் வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்