ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகம் உள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட 20 தொட்டில் குழந்தைகள் இங்கு வைத்து பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் நேற்று முன்தினம் 3 மாதம் முதல் 9 மாதம் வரையில் உள்ள 10 குழந்தைகளுக்கு நோய்தடுப்புக்கான சுழற்சி முறை தடுப்பூசி போடப்பட்டது. பிறகு காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் தடுப்பூசி போட்ட குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 8 குழந்தைகளையும் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர் .அங்கு தீவிர சிசு பிரிவில் உள்ள ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த குழந்தைகளுக்கு 24 மணிநேரமும் பலத்த கண்காணிப்புடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது ‘‘தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடும் போது குழந்தைகளுக்கு சளி உள்ளதா? அல்லது ஏதேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதன் பிறகு தடுப்பூசி போடவேண்டும். ஆனால் இந்த குழந்தைகள் விவகாரத்தில் 8 குழந்தைகளுக்கும் அதிகமான மார்புசளி இருந்த காரணத்தால் தற்போது தடுப்பூசி ஒத்துக்கொள்ளாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. விரைவில் குழந்தைகள் ஆரோக்கியமான நிலைக்கு வந்து விடுவார்கள் என்றனர்.
