ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவின் 78ம் ஆண்டு சுதந்திர தின விழாவை, 3 நாட்கள் இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் இன்று(12-08-2024) பாஜக இளைஞரணி சார்பில், மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து, வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.வே.சு. ஐயர் வீடு வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்வதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும், அனுமதி இன்றி இருசக்கர வாகனத்தில் வந்தால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மேஜர் சரவணன் நினைவுச் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் ஒரே இடத்தில் திரள முடியாதபடி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் சிவா, மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், திருச்சி மாநகர மாவட்டத் தலைவர் ராஜசேகரன், உறையூர் மண்டலத் தலைவர் ராஜேஷ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தங்களது இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடியுடன் புறப்பட்டனர். அரசு மருத்துவமனை, எம்ஜிஆர் சிலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று மீண்டும் பாஜக அலுவலகத்திற்கு திரும்பினர். ரூட்டை மாற்றி, பாஜகவினர் தங்களது இருசக்கர பேரணியை நடத்தி னர். இதைசற்றும் எதிர்பாராத போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
இருசக்கர பேரணி குறித்து பாஜக இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் கூறுகையில், இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடுங்கள் என்று பாரத பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் மூன்று நாட்கள் கொண்டாட மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருக்கிறார். இதற்காக நாங்கள், நேற்று திருச்சி செஷன்ஸ் காவல் நிலையம் சென்று உரிய அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பதில் கிடைத்தது. அதையடுத்து போலீஸ் தடையை மீறி இருசக்கர பேரணியை நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அரசா? அல்லது பிரிட்டிஷ் அரசா? என்று தெரியவில்லை. அந்தளவிற்கு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன.
இதையெல்லாம் மீறி, நாளை வீடுகள்தோறும் தேசிய கொடிகளை ஏற்றி வைத்து, வீடு, வீடாக ஊர்வலமாக சென்று சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடவிருக்கிறோம்” என்று கூறினார். போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதனை மீறி பாஜகவினர் பேரணியாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.