திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(12-08-2024) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதவத்தூர் கிராம பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு, கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்கள் எல்லோரும் சென்று மனு கொடுக்க முடியாது, உங்களில் முக்கியமானவர்களை மட்டும் தான் அனுமதிக்க முடியும் என்று கூறினர். இதனால், கிராம மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் பொதுமக்கள் சிலர் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவாயிலை இழுத்து மூடினர். இதனால், அதவத்தூர் கிராம மக்கள் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை தலைமையில் கலெக்டர் அலுவலக சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் வெயில் அதிகமாக இருந்ததால்
சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முக்கியமான வர்களை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல, திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள நத்தமாடிபட்டி, முடுக்குப்பட்டி, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்களும் கலெக்டர் அலுவலக சாலையின் மற்றொருபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை முற்றிலும் ஸ்தம்பித்தது.
திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு முக்கியமானவர்கள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed.