திருச்சி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை பாய்ந்து சென்று பிடித்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி…!
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் தங்கராசு (45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தினை இவரும், இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது அண்ணன் கணேசனுக்கு பிரிக்கப்பட்ட பங்கில் விவசாய கேணி உள்ளது. தங்கராசுக்கு பிரிக்கப்பட்ட நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்கும், கேணிக்கும் சேர்த்து இலவச மின்இணைப்பு உள்ளது.
ஒரு இலவச மின் இணைப்பு பெற்று இரண்டு இடங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதாக மின்வாரியத்துக்கு வந்த புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து தங்கராசுவுக்கு அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். இந்நிலையில் தங்கராசு தனியாக பயன்படுத்தி வந்த மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கும் மாற்றி உள்ளார். இதுகுறித்து பெண் ஒருவர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும், தொட்டியம் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து ஏ.டி. திருமாறனை சந்திக்குமாறு தங்கராசு அழைக்கப்பட்டார். அதன்பேரில் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த தங்கராசுவிடம், பெண் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 2000 லஞ்சம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்க நேரிடும் என ஏடி திருமாறன் கேட்டுள்ளார். அதற்கு தங்கராசு, பணம் எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தார். பின்னர் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அங்கு இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் ஆலோசனைப்படி, இன்று( 02.07-2024) தொட்டியம் ஏடி திருமாறனிடம் லஞ்சப்பணம் 2 ஆயிரத்தை தங்கராசு கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் பாய்ந்து சென்று ஏடி திருமாறனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.