Rock Fort Times
Online News

திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு – 2 பேர் உயிரிழப்பு…!

கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 3-ந் தேதி குள்ளஞ்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.   திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உணவு சாப்பிட்டனர். புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (வயது 65) என்பவரும் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டுக்கு சென்ற  சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் உடல் சோர்வுடன் காணப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு குள்ளஞ்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதேபோல, திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட புலியூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (61), ராஜமாணிக்கம் மகன் ராஜ்குமார் (27), பாவாடை மகன் சுதாகர் (33), உக்கிர மூர்த்தி (62), ராஜலிங்கம் மகன் கண்ணன் (42), பழனிவேல் (50), கோவிந்தசாமி மகன் சிங்காரவேல் (50), சிகாமணி (61), தேவர் (51), ஆறுமுகம் மனைவி சின்னமணி (40), பொன்னையாள் (50), சுப்பிரமணியன் மனைவி சின்னம்மாள் (53) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதற்கிடையே கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பும், புலியூர் காட்டுசாகை தெற்கு தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் களிகானம் என்கிற நாராயணசாமி (55) நேற்று இரவும் உயிரிழந்தனர். இது பற்றி குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்