சென்னை பெருநகர ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மீஞ்சூர் மார்க்கெட் அருகே உள்ள பிரதான சாலையில் இன்று (28-04-2024) கிடந்த கோணிப்பை ஒன்றில் ஈக்கள் அதிகமாக மொய்த்து க் கொண்டு இருந்தன. துர்நாற்றமும் வீசியது. இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோணி பையை பிரித்துப் பார்த்தபோது அதில்
கொடூரமான முறையில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் திணிக்கப்பட்டு இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான அஸ்வின்(32) என்பது தெரிய வந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்?, தொழில் போட்டி காரணமா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்பன போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.