Rock Fort Times
Online News

கட்டிடத்துக்கு அனிதா பெயர் சூட்டினால் தீர்ந்து விடுமா ? நீட் பிரச்சினை – தேமுதிக பொருளாளர் பிரேமலதா கண்டனம்.

அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அரசு நினைக்கிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு; புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆவின் பால் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து அடுத்தவர் மீது குறை சொல்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்றார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது நிச்சயமாக கண்டனத்திற்குரிய விஷயம். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், ஒரு பெயரை சூட்டிவிட வேண்டியது, ஒரு சிலையைத் திறந்துவிட வேண்டியது. இதுபோல் செய்தால் அத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் எனத் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்