Rock Fort Times
Online News

போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கும் டிட்டோ ஜாக்….

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று(4-1-2024) நடந்தது. கூட்டத்துக்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மயில் தலைமை வகித்தார். டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், முத்து ராமசாமி, தாஸ், தியோடர், சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் திருச்சி நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குபின் மயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் 21ம்தேதி அரசாணை 243ஐ வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான ஊட்டுப்பதவிகளில் தொடக்கக்கல்வித்துறையின் சார்நிலை பணி விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தொடக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். ஆகவே, அரசாணை 243ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கடந்த அக்டோபர் 13ம்தேதி 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் சென்னையில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்று வரை அந்த 12 கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகப்பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். எனவே, ஏற்கனவே ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இந்த 2 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் ஜனவரி 11ம்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களில் மாலை நேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், ஜனவரி 27ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத அறப்போராட்டமும் என 2 கட்ட போராட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் டிட்டோஜாக் திட்டமிடல் கூட்டம் 6ம்தேதி நடைபெறும். இந்த 2 போராட்டங்களுக்கு பின்பும் தமிழக 2 கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிட்டோ ஜாக் மிகக்கடுமையான போராட்டங்களை திட்டமிடும். இவ்வாறு அவர் கூறினார். வருகிற 9-ம் தேதி முதல் தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது ஆசிரியர் கூட்டணியும் போராட்டத்தில் குதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்