தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் போலி சித்த மருத்துவா் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு துண்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த செய்தி தான் தஞ்சை மாவட்டத்தில் ஹார்ட் பீட் ஆக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47). சித்த வைத்தியம் செய்து வந்த இவர், சமீபத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த அசோக்ராஜன் (வயது 27) என்ற வாலிபரை கொன்று தனது வீட்டில் புதைத்ததாக கைது செய்யப்பட்டார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்த அசோக்ராஜன் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அசோக்ராஜன் ஆண்மைக் குறைவு சிகிச்சைக்காக கேசவமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆண்மை குறைவுக்கு மருந்து கொடுத்த கேசவமூர்த்தி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அசோக்ராஜனின் தலையை துண்டித்து கேசவமூர்த்தி படுகொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்து விட்டார். வெளியில் சென்ற அசோக்ராஜனை காணவில்லை என்று உறவினர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அசோக்ராஜன் கடைசியாக கேசவமூர்த்தி வீட்டுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அசோக்ராஜனை கொலை செய்து புதைத்ததை கேசவமூர்த்தி ஒப்புக்கொண்டார். கேசவமூர்த்தி அடையாளம் காட்டிய இடத்தில் குழி தோண்டப்பட்டு அசோக் ராஜனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக கேசவ மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இது ஒரு புறம் இருக்க கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோழபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் மாயமாகி உள்ளார். அவரும் கடைசியாக கேசவ மூர்த்தியை சந்தித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அசோக்ராஜனை போல அவரையும் கேசவமூர்த்தி கொன்று புதைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் மீண்டும் அவரது வீட்டில் குழி தோண்டி பார்க்கப்பட்டது.
அப்போது தோண்ட தோண்ட மனித எலும்பு துண்டுகள் கிடைத்தன. அந்த எலும்பு துண்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.
கேசவமூர்த்தி முழுமையாக சித்த மருத்துவம் படிக்கவில்லை, பத்தாம் வகுப்பு வரை படித்த அவர் சித்த மருத்துவத்தை எப்படியோ தெரிந்து கொண்டு இதில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் பலர் சித்த மருத்துவம் பெற்றுள்ளனர். மருத்துவம் பெற்ற மேலும் பலரை அவர் கொன்று புதைத்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.