Rock Fort Times
Online News

தீபாவளி வசூல்: திருச்சி வேளாண் விற்பனை அதிகாரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு- ரூ.10 லட்சம் சிக்கியது…

தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருச்சி மாவட்ட அலுவலகம் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் செயலாளராக சுரேஷ்பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து செயலாளர் சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினர் திருச்சி பாலக்கரையில் உள்ள சுரேஷ்பாபு அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.இதுதொடர்பாக சுரேஷ்பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த தொகையை, தான் தங்கி இருக்கும் கிராப்பட்டியில் வைத்திருப்பதாக கூறியதன்பேரில் அவர் தங்கி இருக்கும் அறையை சோதனை செய்தபோது அங்கு கட்டுக்கட்டாக ரூ. 8 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்து சுரேஷ்பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் ரெய்டு  நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்