திருச்சி மாவட்டத்தில் மேல் முறையீடு செய்தவர்களில் 21,000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை…
அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்...
தமிழ்நாட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, மேல் முறையீடு செய்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்டமாக 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( 10.11.2023 ) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 1000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் 42 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 21,000 பேருக்கு இன்று வழங்கியுள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி,காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.