அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை கிராமம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் துரைராஜ். இவரது மகன் வில்ப்ரிண்ரெக்ஸ் ( வயது 32 ). இவருக்கும், திருச்சி திருவெறும்பூர் நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகள் கமலி (21) என்பவருக்கும் கடந்த 2021 நவம்பர் 27-ம் தேதி பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கமலி பெற்றோர் 15 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் வரதட்சணையாக வழங்கினர். அதன் பின்னர் , கமலியிடம் அவரது கணவர், மாமியார், உறவினர்கள் ஆகியோர் மேலும் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பேரில், மீண்டும் ரூ.1 லட்சம் பணத்தை பெற்றோரிடம் வாங்கி கணவரிடம் கொடுத்தார். இருந்தபோதிலும் மீண்டும் அவரிடம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை கொடுத்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த கமலி, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார், கமலியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர், மாமியார் மற்றும் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.