தமிழக அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி : 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைபடி 4 சதவீதம் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.