திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 2 பேர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் அடமானக்கடன் வாங்கினர். ஆனால், அவர்கள் வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு வங்கி நிர்வாகம் மனு கொடுத்தது. மனுவை விசாரித்த கலெக்டர் அடமான சொத்துக்களை ஜப்தி செய்து வங்கி வசம் ஒப்படைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று ( 18.10.2023 ) திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி ஊழியா்கள் காஜாமலை லூர்துசாமி காலனியில் உள்ள பங்குதாரர்கள் 2 பேர் , அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர்.
அப்போது, அந்த இடத்தின் உரிமையாளர்கள் 25-க்கும் மேற்பட்டவர்களுடன் மண்டல துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் துணை தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரியும், பணி பாதுகாப்பு வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் திடீரென்று இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வருவாய்த்துறை ஊழியர்கள் கைவிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.