Rock Fort Times
Online News

பேருந்துகளில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.7க்கு மேல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்…

திருச்சி மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு...

திருச்சி மாவட்டம் துறையூர் பகளவாடியை சேர்ந்தவர் குருநாதன். இவர் கடந்த 18.7.23ம் தேதி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மக்கள் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில், திருச்சி மாவட்டம் பகளவாடி-
துறையூருக்கு இடையிலான 10 கி.மீ. தூரத்திற்கு பேருந்துகளில் ரூ. 7 முதல் ரூ.10 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10 கி.மீக்கு உள்பட்ட தொலைவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5.80 மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்பது அரசு விதிமுறையாகும். ஆனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ரூ. 7 முதல் 10 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்து நீதிமன்றம் விசாரித்து உரிய தீர்வு காணவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மக்கள் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக உரிய பதிலளிக்கும்படி அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், திருச்சி பெரியமிளகுபாறையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துகழக மண்டல கிளை மேலாளர், ஸ்ரீரங்கம், துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நேற்று ( 13.10.2023 ) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அரசு பேருந்துகளில் காப்பீடு மற்றும் சுங்கக்கட்டணம் இவற்றை சேர்த்து
ரூ.7 வசூல் செய்யப்படுவதாகவும், தனியார் பேருந்துகளில் ரூ.10 வசூல் செய்வது குறித்த புகாரின் பேரில் பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் அனைவரும் உறுதியளித்தனர். புகார்தாரர் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜெய்சிங் தீர்ப்பளித்தார். வழக்கில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்