Rock Fort Times
Online News

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க லஞ்சம் வாங்கிய முன்னாள் அரசு அதிகாரிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை…

திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் அரசு அதிகாரி ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க லஞ்சம் பெற போவதாக அப்போதைய லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது தொழிலக பாதுகாப்பு முன்னாள் இயக்குனர் இளங்கோவன் என்பவர், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதாக கூறி ரூ. 5 லட்சம் பேரம் பேசி ஸ்டெர்லைட்  நிறுவனத்தின் மேலாளர்கள் சற்குணன் மற்றும் ஜோசப் பீரீஸ் ஆகியோரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை முன்பணமாக பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இளங்கோவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (13-10-2023) தீர்ப்பளிக்கப்பட்டது. திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் , தொழிலக பாதுகாப்பு முன்னாள் இயக்குனர் இளங்கோவனுக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டளையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கினை திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவின் தற்போதைய டிஎஸ்பி மணிகண்டன் , உதவி ஆய்வாளர் பாஸ்கரன், அரசு தரப்பு வழக்கறிஞா் சுரேஷ்குமார் ஆகியோர் திறம்பட நடத்தி முன்னாள் அரசு அதிகாரி இளங்கோவனுக்கு தண்டனை பெற்று தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்