ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒரு மாதத்திலேயே அதிக வருமானம் ஈட்டலாம்…
HDFC வங்கி கிராமிய லோன் திருவிழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பேச்சு...
HDFC வங்கி சார்பில் “கிராமிய லோன் திருவிழா” திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் இன்று ( 13.10.2023 ) நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கிராமிய லோன் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து HDFC வங்கி சார்பில்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்கள், தங்க நகை கடன், பயிர் காப்பீடு திட்டம், வணிக வாகன கடன்கள், தொழில் மூலதன கடன்கள் என ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
விவசாய கடனுக்காக தமிழக அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசுடன் தனியார் வங்கிகளும் கைகோர்த்து விவசாயிகளுக்கு கடன் வழங்கினால் விவசாயிகள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவார்கள். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் நவீன மாற்றங்களை கற்றுக்கொண்டு செயல்பட்டால் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து அதன் வாயிலாக லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. ஐ.டி நிறுவனத்தில் ஒரு நபர் 10 வருடம் வாங்கக்கூடிய சம்பளத்தை விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒரு மாதத்திலேயே பெற முடியும். பெற்றோர் தங்களது பிள்ளைகளை பொறியாளராக, மருத்துவராக, கலெக்டர் ஆக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யாரும் விவசாயி ஆக வேண்டும் என்று சொல்வதில்லை. விவசாயிகளுக்கு மொத்த கடனில் 13 சதவீதம் பயிர் கடனாக வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். லோன் திருவிழாவில் வங்கியின் வணிக மற்றும் கிராம வங்கியின் குழு தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா மற்றும் வங்கி அதிகாாிகள், அரசு அலுவலா்கள், விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் திரளாக கலந்து கொண்டனா்.
பின்னர், வங்கியின் வணிக மற்றும் கிராம வங்கியின் குழு தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கியானது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் வகையில் , இந்த லோன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் உபகரணங்களை வாங்குவதற்கும், சேவைகளை பெறுவதற்கும் நிதி தீர்வுகளை வழங்குகிறோம். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதே எங்களது முக்கிய நோக்கம். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு அறிக்கையின்படி, HDFC வங்கி ஜூன் 30, 2023 நிலவரப்படி மொத்த ரூ. 29,000 கோடி, கடன் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.