ராமநாதபுரம் பகுதியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு மர்ம நபர்கள் சிலர் காரில் தங்கம் கடத்திச் செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை முகாமிட்டிருந்த டிஆர்ஐ குழுவினர், அவ்வழியே செல்லும் கார்களை கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது 3 சூட்கேஸ்களில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை மீட்டு காரில் வந்த இருவரையும் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதும், இலங்கையிலிருந்து அக். 9 ஆம் தேதி தேவிப்பட்டிணம் வந்த தங்கத்தை சென்னையில் உள்ள நகைக்கடை வியாபாரிகளுக்கு எடுத்துச் செல்ல அவர்கள் குருவிகளாக வேலை செய்ததும் தெரியவந்தது. பெட்டிகளில் 7,556 கிலோ கிராம் எடையுள்ள 45 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 4.48 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும், தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.