Rock Fort Times
Online News

மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக்கூடாது: பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை  ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள், மாணவர்கள் அணுகா வண்ணம் சுற்றுவேலி அமைத்தல், கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்