முதல்வர் குறித்து அவதூறு பேச்சு- பொதுக்கூட்டம் நடத்தி அதிமுக மாஜி எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்…
நூதன நிபந்தனை விதித்தது ஐகோர்ட்..!!
முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்துள்ளது. உளுந்தூர்பேட்டையின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறாக பேசியதாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த முன்ஜாமீன் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், முதலமைச்சர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டி, அவதூறாக பேசியதால் குமரகுருவுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு நிபந்தனை ஒன்றை விதித்தார். அதாவது, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதன் பிறகு முன்ஜாமீன் குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.