Rock Fort Times
Online News

தங்கக் கட்டிகள் தருவதாக ஏமாற்றி ரூ.25 லட்சம் பறித்த 4 பேர் கும்பல் கைது ….

கடந்த 18 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன், தனது நண்பர் ஜெகதீஷ் மூலம் பழக்கமான துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் வெளிநாட்டு தங்க கட்டிகள் உள்ளதாகவும், 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் நகையை தருகிறேன் என தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ஜியாவுதீன் தனது நண்பரான கார்த்தி என்பவருடன் ரூ.14,50,000 எடுத்துக்கொண்டு 18 ம் தேதி மாலை அன்வர் பாஷாவை துவரங்குறிச்சி மோர்னிமலை முருகன் கோவில் பின்புறம் சந்திக்க சென்றுள்ளார். அங்கு, காரில் ஜியாவுதீன் மற்றும் கார்த்தி ஆகியோர் வந்து, அங்கிருந்து அன்வர் பாஷாவிற்கு போன் செய்தபோது, அங்கு மற்றொரு காரில் அன்வர் பாஷா மற்றும் 7 நபர்கள், ஒரு நபரை அனுப்பி ஜியாவுதினிடம் பணம் இருப்பதை உறுதி செய்து கொண்டு, தகவலை மேற்படி அன்வர் பாஷாவிற்கு ரகசியமாக தெரிவித்துள்ளார். உடனடியாக, காரில் காக்கி சீருடை அணிந்த ஒருவருடன் மற்ற 7 நபர்களும் சேர்ந்து வந்து, ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் பின்புறம் ஏறி, கார்த்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.14,50,000 பறித்துச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தொடர்புடையவர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ்சின்  உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது . தனிப்படை போலீசார் இன்று ( 21.09.2023 ) மதியம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொருவாய் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்ற போது, காரில் இருந்த 4 நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர், அப்போது காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் போன்றே கடந்த 28.01.2023-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி சந்தானமாதா கோவில் அருகில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி, ரூ.10,50,000 ஏமாற்றி கொண்டு சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனா். இதுகுறித்து , அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில் , மஞ்சம்பட்டி பகுதியில் பாலசுப்பரமணியன் என்பவரிடம் ரூ.10,50,000 ஏமாற்றி பணத்தை எடுத்துசென்றதாக ஒப்புக்கொண்டனர்.
அதன்பேரில் பிடிபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த ஒரு தங்ககட்டி (100 கிராம்), 10-போலி தங்கக்கட்டிகள், ரூ.2,70,000 பணம், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், காசோலை புத்தகங்கள், தமிழ்நாடு அரசு முத்திரை கொண்ட Civil Judge என எழுதப்பட்ட லோகோ, 12-சிம் கார்டுகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் , குற்றவாளியை பிடித்த தனிப்படையினரின் சிறப்பான செயலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ் வெகுவாக பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்