முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில்,
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2-வது இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக்கான கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.




பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதிமாறன் எம்.பி.,
அவசர கதியில் பாராளுமன்றத்தை கூட்டுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறார். வெளி நாடுகளுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டும்போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள். அதுவும் ஏன் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்கள்.அந்த குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை. அதேபோல தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. முதல் முறையாக பதவியிலிருந்து சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்துள்ளார்கள்.அதுவும் ஏன் என தெரியவில்லை. மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா கூட்டணி மக்கள் கூட்டணி.
சி.ஏ.ஜி.ஊழல் மிகப்பெரிய ஊழல், அதை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்சனை இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை. 2024 ல் இந்தியா கூட்டணி வெற்றி , பெற்றவுடன் நீட்டிற்கு விதி விலக்கை கொண்டு வருவோம்
என்றார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர்கள் டால்பின் சாலமன், லோகநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் கௌதம், பஷீர்அகமத், நாகராஜன், ரவீந்தரநாத், மதன் சிவா, நாகராஜன், பிரபு, ஹரிஹரன், ராஜராஜன், பிச்சையப்பன், அன்பில் கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.