Rock Fort Times
Online News

சந்திரயான் -3ன் “லேண்டர்” நாளை நிலவில் தரையிறக்க திட்டம்….!

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை ஜூலை மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலன், ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் – 3 விண்கலமாகும். இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன. பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்தது. பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் தற்போது நிலவை சுற்றி வருகிறது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 100 கி.மீ., துாரத்தில் இருக்கும்போது லேண்டர் சாதனம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.நாளை ( 23.08.2023 ) இந்த இலக்கை எட்டியதும், லேண்டர் சாதனத்தின் வேகம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிலவின் மேற்பகுதியில் மெதுவாக தரை இறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். முன்னதாக, நாளை மாலை 5-45 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாலை 6-04 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த காட்சிகளை நேரலையில் காண்பதற்கான ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது. அதன்படி https://isro.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை மாலை 5:27 மணி முதல் பொதுமக்கள் காணலாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்