திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில், 100-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று ( 21.08.2023 ) நடந்தது. இதில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டதோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது தான் பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில் இக்கல்லூரியும் பெண் கல்விக்கு கடந்த 100 ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலங்களில்தான் சொத்தில் பெண்களுக்கு உரிமை, காவல்துறையில் உயர் பதவிகளில் பெண்கள் நியமனம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மகளிருக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, உள்ளாட்சி நிர்வாகங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
அதேவழியில் தற்போதைய முதலமைச்சரும், பெண்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று முதலில் கையெழுத்திட்ட திட்டம் மகளிருக்கான இலவச பேருந்து வசதி திட்டம்தான். அதுபோல கல்லூரி பயிலும் மகளிர்க்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ. 1000 வழங்குவது, இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் அமைச்சராக உள்ள விளையாட்டுத்துறையிலும் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அமிர்தசரஸ்சில் நடைபெற்ற தேசிய மகளிர் (சீனியர்) கால்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது. அந்த அணியினரை தமிழக முதல்வர் அழைத்து அவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறையில் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆசிய ஹாக்கி போட்டிகள், மகாபலிபுரத்தில் சறுக்கு அலை விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டில் இளையோருக்கான கேலோ யூத் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிற மாநிலத்தவரும் பயன்பெறும் வகையில் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல இன்னும் பல உயரங்களை தொடவுள்ளது தமிழக விளையாட்டுத்துறை. இங்கே சாதனை படைத்த மாணவியர் இதுபோல மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், திமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் கருணாமிதி தொடங்கி தற்போதுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் என எதிர்காலத்திலும் இக்கல்லூரிக்கான கல்விச்சேவையில் அரசின் சார்பில் வழங்கப்படும் உதவி தொடரும் என்றார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தமிழகம் சார்பில் ஒரு பெண்கூட பங்கேற்கவில்லை, மன ரீதியான தன்னம்பிக்கை ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம். எனவே, விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மகளிர் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக காலையில் தொடங்கிய விளையாட்டு போட்டிகளை பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளைப் பெற்றவரும், 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்றவரும், இந்திய உணவுக்கழக தென்பிராந்திய பொதுமேலாளருமான ஷைனி வில்சன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி வரவேற்றார். விழாவில், எஸ். இனிகோ இருதயராஜ் எம். எல்.ஏ, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், ஆணையர் இரா. வைத்திநாதன், கல்லூரி செயலர் ஆனிசேவியர், வழக்கறிஞர் சின்ன ராஜூ, மாவட்ட கவுன்சிலரும், திட்ட குழு உறுப்பினருமான தீபா சின்னராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.