Rock Fort Times
Online News

எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, சாய் பல்லவி உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது… * முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று( அக்.11) நடைபெற்றது. 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம் பிரபு உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக, அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது; இங்கு விருது பெற்ற பெரும்பாலானோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான். பலருடைய கலை தொண்டு குறித்து எனக்கு தெரியும். மூத்த கலைஞர்களுக்கு மட்டும் இல்லாமல், வளர்ந்து வரும் கலைஞர்கள் அடையாளம் கண்டு மிக சரியானவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 90 வயதான முத்துக்கண்ணம்மாள் முதல் இளம் இசையமைப்பாளர் அனிருத் வரை விருது பெறுகிறார்கள். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் தங்கம் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒருநாளைக்கு இருமுறை விலை ஏறிட்டு இருக்கிறது. விருது அறிவித்த போது இருந்த தங்கத்தின் விலையும், இன்றைய விலையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். ஆனால், அவ்வளவு மதிப்புக்குரிய வகையில் அமைந்துள்ளது இந்த நிகழ்ச்சி. தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு தான் மதிப்பு அதிகம். ஏனெனில் இது தமிழகம் தரும் பட்டம். நலிந்த நிலையில் வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளையராஜா மீது நமக்கு இருப்பது கலைப்பாசம். அதே பாசத்தில் தான் உங்களுக்கு கலைமாமணி விருது வழங்குகிறோம். இந்தக் கலை தமிழை வளர்க்கும் பெரும் தொண்டை செய்தது. மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும். நம் அடையாளம் அழிந்து விடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து வாழ்வதில் என்ன பயன்? கலை, மொழி, இனம், அடையாளத்தை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்