சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று( செப்டம்பர் 16) நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களின் கேள்விகளுக்கு தெளிவாகவும், காரசாரமாகவும் பதிலளித்தார். சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அது கூட்டணிக்கு பலவீனங்களைத்தான் ஏற்படுத்தும்” என்று விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தேமுதிக எப்போதும் தனது சொந்த பலத்தை நம்பியே களமிறங்கும் ஒரு கட்சி என்று சுட்டிக்காட்டிய அவர், “எங்களால் எந்த ஒரு கூட்டணிக்கும் பலவீனம் ஏற்படாது; மாறாக, தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலமே கிடைக்கும்” என்று உறுதியாகத் தெரிவித்தார். மேலும், “திருமாவளவன் என்ன நோக்கத்திற்காக அப்படிப் பேசினார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் தேமுதிகவை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேமுதிக தனது தொண்டர்களின் விருப்பத்திற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என்றார். விஜயகாந்த் உருவாக்கிச் சென்ற லட்சியப் பாதையில் தேமுதிக உறுதியுடன் பயணிப்பதாகக் கூறிய பிரேமலதா, வரவிருக்கும் தேர்தலில் தேமுதிக முக்கியப் பங்கை வகிக்கும் என்று தெரிவித்தார்.

Comments are closed.