Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் இருந்து 5ஆயிரத்து 637 பேர் ஹஜ் பயணம். ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி…

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது.
அதில், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவருமான அப்துல் சமது, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் ஆண், பெண் ஹாஜிக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர், அப்துல் சமது எம்.எல். ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் இந்த வருடம் சுமார் 1லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5ஆயிரத்து 637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராகவுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஒரு நபர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள 34 நாட்கள் செலவாகிறது. அவர்கள் சென்று வருவதற்கான விமான கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதிகளுக்கான கட்டணம், உணவுக்கான செலவு என ரூ .3.5லட்சம் செலவாகிறது. அதில் அரசு சலுகை மற்றும் மானியமாக ரூ.25ஆயிரம் கொடுக்கிறது. கடந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தை 4 ஆயிரத்து 34 பேர் மேற்கொண்டனர்.
ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளக் கூடியவர்கள் செல்லக்கூடிய இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி முகாம் இங்கு நடத்தப்பட்டது. அதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் பயணிகள் பங்கேற்றனர். வரும் 26-ந் தேதி ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டில் இருந்து முதல் விமானம் புறப்படுகிறது. அடுத்தடுத்து ஜூன் 9-ந் தேதி வரை மொத்தம் 17 விமானங்களில் ஹஜ் பயணிகளை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 13-ந் தேதிக்குள் ஹஜ் புனித பயணத்தை முடித்துவிட்டு அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இவர்களுடன் அனுபவம் மிக்க தன்னார்வலர்களும் உடன் செல்கின்றனர். மக்கா, மதினா, அரபா மைதானம் ஆகிய புனித இடங்களில் பயணிகள் செய்யவேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறை புத்தகம் ஹஜ் பயணிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் ,கவுன்சிலர் பைஸ் அகமது, முகமது ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்