Rock Fort Times
Online News

திருச்சியில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தங்கை இறந்த துக்கம் மறைவதற்குள் தாளாத சோகம்

திருச்சி அரியமங்கலம் ரயில் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநர்.இவரது தாயார் சாந்தி (வயது 65). மாரிமுத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் பிரதிபா, ஹரிணி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் வசிக்கும் மாரிமுத்துவின் தங்கை திடீரென இறந்து விட்டதால் மாரிமுத்து சென்னைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று (ஜனவரி -1)அதிகாலை மாரிமுத்துவின் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த 4 பேரையும் மீட்க தொடர்ந்து முயற்சித்தனர். இருந்தும் அவர்களின் மீட்பு பணி தோல்வியில் முடிந்தது. இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர். இறந்த உடல்கள் மீட்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து அரிய மங்கலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரான மாரிமுத்துவின் தங்கை சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அதே குடும்பத்தினர் வசித்த வீட்டின் சுவர் இடிந்து 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்