பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16 ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை வாதாட கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவரது தரப்பில் ஆஜராகி வாதாடவில்லை. அதைதொடர்ந்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் 5 நாட்கள் ஆஜராகி வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார். இந்த வழக்கு பிப் 9 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். இந்த நிலையில், இதன் தீர்ப்பு 12 ம் தேதி வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி பூர்ணிமா, 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்வதாக தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு முப்பது நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும், அதுவரை ராஜேஷ் தாஸுக்கு ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். அதேபோல செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு விதித்த ரூபாய் 500 அபராதத்தையும் நீதிபதி பூர்ணிமா உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.