ம.தி.மு.க.சார்பில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,திருச்சி புறநகர் தெற்கு புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் டாக்டர்.ரொஹையா தலைமை தாங்கிப்பேசினார். விழாவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தேர்தல் நிதி பெற்று சிறப்புரை யாற்றினார். இதில் பொருளாளர்.
செந்திலதிபன், வழக்கறிஞர் சின்னப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை யாற்றினர். விழாவில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு. டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மாத்தூர் கலியமூர்த்தி, ஆசை சிவா, ஜெயசீலன், ராமநாதன் ஆகியோர் நிதி வழங்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதையும் அவர் முரண்பாடு என்கிறார்.
அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எதிர்பார்க்கிறார். கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ,ஆகியோர் பெயர்களை தவிர்த்து உரையை வாசித்தார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார். அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார். மத்திய பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம். பாஜக நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று கூறுவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. 18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரிபொருள் விலை குறைப்பு போன்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. எரிபொருள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம். பல விஷயங்களில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பதால், மக்கள் அவர்களின் மேல் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும். திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்பது கட்சி தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்ய சபா தொகுதியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெள்ளமண்டி சோமு. டி.டி.சி.சேரன்,மணவை தமிழ் மாணிக்கம்,பகுதி செயலாளர் செல்லத்துரை, கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார்,முன்னாள் கவுன்சிலர் முஸ்தபா, மாரி என்கிற பத்மநாதன், எஸ்.ஆர். செந்தில், ராஜன் இளமுருகு,பொன்மலைப்பட்டி கணேசன், கே.பி.மனோகரன், அடைக்கலம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.