கும்பகோணத்தில் பெண்களிடம் வழிப்பறி செய்த ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது…!
சிசிடிவி கேமரா மூலம் துப்பு துலக்கிய போலீசார்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரப்பகுதிகளில் அண்மைக்காலமாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி நடப்பது அதிகரித்து வந்தது. இதுகுறித்த
புகார்களின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை பிடிக்க வலை விரித்தனர். கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் மற்றும் போலீஸார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழிப்பறி தொடர்பாக, திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் கும்பகோணம், முத்துப்பிள்ளை மண்டபம், வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வசந்த்(26) மற்றும் இவரது பள்ளி நண்பனான கும்பகோணம், நீடாமங்கலம் பிரதானச் சாலையைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா(25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட 112 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்ஐ மனைவியிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்தது தொடர்பாக குத்தாலம் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வசந்த் ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு சிவாவுடன் சேர்ந்து வழிபறியில் ஈடுபட்டு உடனே ரயில் மூலம் ராணுவ பணிக்கு சென்று விடுவார் என்றும், அதேபோல விடுமுறையில் வந்து பெண்களிடம் கைவரிசை காட்டிய போது தற்போது வசமாக சிக்கிக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Comments are closed.