சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38) மற்றும் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33). இவர்கள் இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக இன்று(4-11-2024) காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். நித்யா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நித்யாவும் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.