கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் திருநாவுக்கரசு(73) ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வசித்து வருகிறேன். ஓய்வு பெற்று வீட்டில் இருந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டராக பணியாற்ற பணியிடம் காலியாக உள்ளதாக சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பிந்து என்பவர் என்னை தொடர்பு கொண்டார். மேலும், டாக்டராக பணியாற்ற என்னுடைய ஆதார் கார்டு, மருத்துவ சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை அனுப்பி வைக்குமாறு கூறியிருந்தார். அவர் கூறியபடி, மருத்துவ சான்றிதழை அனுப்பி வைத்திருந்தேன். அந்த மருத்துவ சான்றிதழை கார்த்திக் பிந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அவர் அந்த கடன் தொகையை செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு கடன் தொகையை செலுத்துமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது சான்றிதழை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. உத்தரவிட்டதன் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை புழலை சேர்ந்த கார்த்திக் பிந்து (43 )என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திக் பிந்து இதுபோன்று நூதன முறையில் மோசடியில் ஏற்கனவே ஈடுபட்டு மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.