Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்த சிவாலயம் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த கோரிக்கை

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியில் கி.பி, 10ம் நுாற்றாண்டை சேர்ந்த பழமையான சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது. சிதைந்த நிலையில், புதர் மண்டிக் கிடந்த சிவாலயத்தை கிராம மக்களுடன் சேர்ந்து, சிவ வழிபாட்டுக் குழுவினர் ஒழுங்குபடுத்தி,ஆலயத்தை மீட்டுள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு, இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள மத்திய அரசின் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் பணிபுரியும் தனசேகர் என்பவர், கும்பக்குடியில் கண்டறியப்பட்ட பழமையான சிவாலயம் குறித்து, ஆற்றுப்படை வரலாற்று அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு ஆய்வு நடத்திய ஆற்றுப்படை வரலாற்று அமைப்பை சேர்ந்த பார்த்திபன் இதுகுறித்து கூறியதாவது: கி.பி., 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த இக்கோவிலின் கல் வெட்டுகள் ஆங்காங்கு சிதைவுற்று காணப்படுகின்றன. கோவிலில் உள்ள விக்ரம சோழரின் கல்வெட்டு ஒன்றில், இந்த ஊர் குறித்த தகவல் உள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டு தென்கரை பிரம்ம தேயம் ஸ்ரீ சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தின் உட்பிரிவாக இந்த ஊர் இருந்திருக்கிறது. கல்வெட்டுகளில் கும்பக்குடி என்றே இடம் பெற்ற இந்த ஊர் ஆயிரம் ஆண்டு கடந்தும், அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. கும்பக்குடி நாடாழ்வான் என்ற அதிகாரியும், கவிர் நாட்டு வெள்ளாளரும், சோழமதேவி சபையாரும் இணைந்து இக்கோவிலுக்கு நிலம் அளித்ததை இக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.  மேலும், லால்குடி அருகே உள்ள அன்பிலுாருடையார், திருவெண்காடுடையார் போன்றோரின் பெயர்களும் மற்றொரு கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. தொல்லியல் துறையினர், ஆங்காங்கு கிடக்கும் கோவில் கட்டுமான கற்களையும், இந்த ஊரிலும் ஆய்வு மேற்கொண்டால், சோழர் கால வாழ்வியல் குறித்து தகவல்கள் கிடைக்கும், என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்