Rock Fort Times
Online News

கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்ச ரூபாயா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் எப்படி வழங்க முடியும்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 65 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக, தமிழ்நாடு அரசு தலா 10 லட்ச ரூபாய் அறிவித்து வழங்கியது. இதனை எதிர்த்து,முகமது கவுஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளச்சாராயம் குடிப்பது என்பதே முதலில் சட்டவிரோதமான செயல், அதில் உயிரிழந்தவர்களை பாதிக்கபட்டவர்களாக கருதக்கூடாது. தீ விபத்து, பேருந்து விபத்து போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் தான் கொடுக்கிறார்கள். ஆனால், கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்குவது தவறு. இது கள்ள சாராயம் அருந்துவதை ஊக்குவிக்கும் செயல். எனவே,10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபி
அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் 10 லட்ச ரூபாய் இழப்பீடு என்பது அதிகமான தொகை.  எப்படி இவ்வளவு அதிகமான தொகையை இழப்பீடாக கொடுத்தீர்கள் என, அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.  மேலும்,இந்த இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசு என்ன சொல்ல விரும்புகிறது என அறிய, அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்