Rock Fort Times
Online News

கருவிழி வைத்தால் போதும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கி கொள்ள முடியும்….

2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தகவல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியில், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வையம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அண்ணா காலம் முதல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு இன்றளவும் உள்ள கட்சி தான் திமுக என பேசினார். பின்னர் உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்த கலைஞர் இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன் 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததுடன் 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்க தமிழக அரசு முடிவு எடுத்து வழங்கி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 560 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார் முதலமைச்சர். ரேஷன் கடைகளில் பழுப்பு இல்லாத தரமான அரிசி மற்றும் தரமான பொருட்கள் தான் மக்களுக்கு வழங்கி வருகிறோம். இப்போது ரேஷன் பொருட்களை பெற விரல் ரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கிச் செல்கிறீர்கள். இனிமேல் கருவிழியை வைத்தும் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்லும் பணி 36 ஆயிரம் ரேசன் கடைகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்னும் 2 மாதத்தில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றார். மேலும் அவர் கூறுகையில், சொல்லில் மட்டுமல்ல செயலிலும் செய்து காட்டுபவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர். தேர்தல் நேரத்தில் 100 நாள் வேலைக்கு 300 ரூபாய் தருவதாக கூறினோம். தற்போது 294 ரூபாய் அறிவிக்கப்பட்டுவிட்டது. 300 ரூபாய்க்கு இன்னும் 6 ரூபாய்தான் பாக்கி அதையும் அறிவித்து விடுவோம். சொன்னதை செய்து விடுவோம். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி விடுவோம் என்று சொன்னோம். ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்காத காரணத்தால் அதனை செய்ய முடியவில்லை என்று கூறினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திறளானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்