திருச்சியில் இன்று பயங்கர சம்பவம்: அரிவாளால் வெட்டி வாலிபர் படுகொலை!
3 பேர் கொண்ட கும்பல் வெறி செயல்..
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தார். இவர் இன்று ( 26.05.2023 ) மதியம் 12 மணி அளவில் உறையூர் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் அங்கிருந்து வேகமாக ஓடினார். அவரை அந்த மர்ம கும்பல் விரட்டி சென்றது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் சண்முகம் நுழைந்தபோது அவரை அந்த கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்து போனார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் எது? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறையூரில் பட்டப் பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.