புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை வருகிற 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அழைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க.உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பின் 79-ம் பிரிவின் கீழ் நாடாளுமன்ற அவைகளை கூட்டுவதற்கும், ரத்து செய்வதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். எனவே நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும், அதன் நிகழ்வுகளை தொடங்கி வைப்பதற்கும், புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.