திருச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுற்ற பணிகளின் தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் இன்று(21-11-2024) நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.18.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ.46.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செல்லும் இடம் எல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக பெண்கள், நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்று கூறுகிறார்கள். அதேபோன்று முதலமைச்சரே… உங்களது அனைத்து திட்டங்களும் நல்லா இருக்கு உங்க உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள பள்ளி கல்லூரி மாணவிகள் போட்டி போடுவதையும் பார்க்க முடிகிறது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் மகளிர் ஆதரவு அதிகமாக இருந்தது. அதைவிட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, மண்டிசேகர், திமுக நிர்வாகிகள் மாத்தூர் கருப்பையா, குடமுருட்டி சேகர், தில்லைநகர் கண்ணன், மோகன்தாஸ், புத்தூர் தர்மராஜ், துபேல் அகமது, வக்கீல் மணிவண்ணபாரதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.