நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் பெண் தற்கொலை- திருச்சி அரசு மருத்துவமனையில் எஸ்டிபிஐ கட்சியினர் திரண்டதால் பரபரப்பு..
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்னுலாபுதீன். இவரது மனைவி பாத்திமா. ஜெய்னுலாபுதீன், தனது நண்பர் சாகுல் அமீதுக்கு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தவணை முறையில் டிவி, செல்போனை வாங்கி கொடுத்தார். ஆனால், சாகுல்அமீது ஊரை விட்டு சென்றதால் ஜெய்னுலாபுதீன், பாத்திமாவிடம் பணம் கேட்டு பைனான்ஸ் ஊழியர்கள் திட்டி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனை அறிந்த ஜெய்னுலாபுதீன் உறவினர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஆபாச வார்த்தையால் திட்டி பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக திருச்சி போலீசார் கரூர் மாவட்ட போலீசாரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்ஸ் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.