திருச்சியில், ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை.வைகோ தலைமையில் பாராளுமன்ற தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் துரை.வைகோ கூறியதாவது:-
ம.தி.மு.க.வின் பலமே தொண்டர்கள் மற்றும் கொள்கைகள்தான். தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த முன்னோடிகள் சேர்ந்து மதிமுக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வர். திருச்சியில் ஏற்கனவே ம.தி.மு.க. போட்டியிட்டு வென்ற தொகுதி. திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திருச்சியில் மதிமுக மீண்டும் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை முடிவெடுக்கும். பேரிடர் நிதி என்பது ஒவ்வொரு ஆண்டும் ₹ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்படும். இதில் மாநில அரசின் பங்கு ₹300 கோடி, மத்திய அரசின் பங்கு ₹900 கோடி. இதில் ₹450 கோடியை கடந்த ஆண்டே அளித்துவிட்டோம். மீதமுள்ள ₹450 கோடி இந்த ஆண்டு கொடுப்போம். கடந்த ஆண்டு நிதியையே தமிழ்நாடு அரசு செலவு செய்யவில்லை என்கிறார் அண்ணாமலை. ஆனால், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ₹19 ஆயிரம் கோடி நிவாரணம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் 450 கோடியை கொண்டு எவ்வாறு நிவாரணப்பணியை மேற்கொள்ள இயலும் என்பதை அண்ணாமலை யோசிக்க வேண்டும். சென்னையை அடுத்த 22 மீனவ கிராமங்கள் கச்சா எண்ணை கசிவால் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ₹12 ஆயிரத்து 500 நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த தொகை போதாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் துாத்துக்குடி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த ஒரு மாவட்டத்தை சீரமைக்க மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும். மிக்ஜாம் புயல் நிவாரணமாக ₹19 ஆயிரம் கோடி வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைக்கு, ₹2 ஆயிரம் கோடி வழங்குகிறோம் எனக்கூறியுள்ளனர். தற்போது தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கும் இதையேதான் கூறுவார்கள். 2011ல் இருந்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு நிவாரணமாக இதுவரை ₹1.27 லட்சம் கோடி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசு கொடுக்கவில்லை. இது தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற சூழ்ச்சியுடன் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு ₹ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியை கொடுத்தால், பதிலுக்கு கால்வாசியை மட்டுமே மத்திய அரசு திருப்பி தருகிறது. ஆனால் உ.பி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி தருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் வளர்ச்சியடைகின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கடந்த 2021 முதல் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் தவித்து வருகின்றனர். பலர் வேலைக்கு செல்ல இயலவில்லை. வேலைக்கு சென்றவர்களும் அசல் சான்றிதழ்கள் இல்லாததால் வேலையைவிட்டு நீக்கப்படுகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாஜ ஆட்சி அமையாத அனைத்து மாநிலங்களிலும் தான். பாஜ-வினர் ஆளுநர்களுக்கு பாடம் எடுத்து அனுப்புகின்றனர். ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மையை திட்டமிட்டு ஆளுநர்கள் வளர்க்கின்றனர். முதல்வர் டெல்லி சென்றது இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுமல்ல. வெள்ள பாதிப்பு குறித்து நேரடியாக பிரதமரிடம் விளக்குவதற்காகவே சென்றார்.
ஆனால், மெத்த படித்த நிர்மலா சீதாராமன் பேசுவதில் அர்த்தமில்லை. முதல்வர், தென்மாவட்டங்களுக்கு சென்று அங்கு பாதிப்புகளை நேரில் பார்த்து அந்த மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
அப்போது கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் டி.டி,சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம், அரியலூர் சின்னப்பா எம்.எல்.ஏ, நிர்வாகிகள் புலவர் தியாகராஜன்,
பெல். ராஜமாணிக்கம், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர் ஆடிட்டர் வினோத் மற்றும் பலர் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.