2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்? – விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக மனு…!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக விருதுநகர் தொகுதி இளம் வேட்பாளரும், தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூருக்கு கடைசிவரை “டப்” கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு சுற்றில் இவர் முந்த அடுத்த சுற்றில் அவர் முந்த இவ்வாறாக கடைசிவரை பெரும் பரபரப்பாகவே இருந்தது. கடைசியாக சுமார் 4,000 வாக்கு வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்தாலும் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அரசியல் நோக்கர்கள் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்து விட்டார். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(06-06-2024) சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார் என்று தெரிவித்த அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறினார். விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் மேலிட பிரஷர் காரணமாக மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மற்ற இடங்களில் தபால் வாக்குகள் முன்கூட்டியே எண்ணப்பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் மட்டும் கடைசியாக எண்ணப்பட்டது ஏன்?. விஜய பிரபாகரன் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்த நேரத்தில் 3 அமைச்சர்கள் வாக்கு எண்னும் மையத்திற்குள் நுழைந்து தேவையில்லாத பிரச்சனைகளை செய்துள்ளனர். இந்த தொகுதியில் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிக்கப்படாத நிலையில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி கூறினார். மேலிட பிரஷர் காரணமாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
விஜய பிரபாகரனை சூழ்ச்சி செய்து வீழ்த்தி விட்டனர்.
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தேர்தல் ஆணையத்திடம் ஈமெயில் மூலம் மனு அனுப்பியுள்ளோம் என்று கூறினார்.
விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வருமாறு:
மாணிக்கம் தாக்கூர்( காங்) :
3,82, 876
விஜய பிரபாகரன்
(தேமுதிக):3, 78,243
ராதிகா சரத்குமார் (பாஜக): 1,64,149
டாக்டர் கௌஷிக்- நாம் தமிழர் கட்சி- 76,122
Comments are closed.