Rock Fort Times
Online News

3 தேர்தல்களில் தொடர் தோல்வி: அதிமுக ஒன்றிணைவது சாத்தியமா? – தலைவர்களிடையே மீண்டும் கருத்து மோதல்…!

எம்ஜிஆர், ஜெயலலிதா  போன்ற பெரும் தலைவர்களால் கட்டி காக்கப்பட்ட அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் அதிமுக  3 அணிகளாக பிரிந்து போட்டியிட்டது தான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் இன்னொரு அணியும் களம் கண்டன. இந்த 3 அணிகளிலும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.  இதேபோல கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக பெரும் சரிவை தான் சந்தித்து இருக்கின்றன.  இது, அதிமுகவுக்கு விழுந்த மூன்றாவது அடி என்றே பார்க்கப்படுகிறது.  கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், பாஜகவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அப்போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ‘இந்த லேடியா?, அந்த மோடியா? என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.  அந்த தேர்தலில் அதி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024-ம் ஆகிய 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. அதில் அதி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேரதலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது.

அதேபோல, இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.  ஆனால், அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.  ஆகவே,பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒரே அணியாக ஒன்றிணைத்தால் மட்டுமே இனி வெற்றி சாத்தியம் என முடிவு செய்த சசிகலா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.  அதிமுக அழிவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது, நல்ல எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதற்கு  ஓ.பன்னீர்செல்வம் இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது கலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.  “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.  நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். அம்மா, உச்சத்தில் அமரத்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி,  இன்றைய தினம்  ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் பாடல்களை ஒப்பிட்டு கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவர், அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. நாங்கள் கோவிலாக கருதும் அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் குண்டர்களை அனுப்பி அடித்து நொறுக்கி பைல்களை திருடி சென்றவர் தான் ஓ. பன்னீர்செல்வம்.  அதிமுக சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓபிஎஸ்.  இதைவிட பாஜக வேண்டாம் என்று நாம் ஒதுங்கி இருந்த நேரத்தில் பாஜகவோடு கைகோர்த்துக்  கொண்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் தான் ஓபிஎஸ். நிலைமை இவ்வாறு இருக்க  அவரது அழைப்பை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் அதிமுக ஒன்றிணைவு தொடர்பாக என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.  அதிமுக தலைவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் அதிமுக ஒன்றிணைவது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
**

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்