திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, குவைத், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய பெருநகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் 150 பயணிகளுடன் ஸ்கூட் விமானம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் விமானம் பறந்த போது விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சபட்டது இதனால், விமானத்தை தரை இயக்க முடியாமல் பைலட் தடுமாறினார். இதுகுறித்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து 30 நிமிடம் அந்த விமானம் வானில் வட்டமடித்தபடி இருந்தது. பின்னர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறப்பட்ட ஆலோசனையின்படி 37 நிமிடம் தாமதமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்போர்ட் அதிகாரிகள் புகார் அளித்தனர். விமான பைலட் அளித்த தகவலின் அடிப்படையில் லேசர் அடித்த பகுதியை போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று மலேசியா, துபாய் நாடுகளிலிருந்து வந்த விமானங்கள் மீதும் லேசர் லைட் பாய்ச்சபட்டது. இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.