திருச்சியில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது வாய்க்காலுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து வாலிபர் காயம்…!
திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (28). இவர் மீது திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வழக்குகளில் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டரை பாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்த போலீசார் சைகை காட்டினர். ஆனால், அந்த வாலிபர் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக தப்பி சென்றார்.
போலீஸார் அவரை பிடிக்க முயன்ற போது அவர் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த உய்யக்கொண்டான் பாலம் அருகே வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில் , அந்த வாலிபரின் வலது முன்னங்காலில் காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுதாகர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து அவரை போலீசார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.